கறுப்பர் கூட்டம் பிரச்சினையை தமிழக பாஜக விடுவதாக இல்லை. நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் முருகன்,
"திமுக தலைவர் ஸ்டாலின் இதுவரை கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை கண்டித்து எந்த கருத்தையும் கூறவில்லை. இதன் மூலம் கறுப்பர் கூட்டத்துக்கும் ஸ்டாலினுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து ஸ்டாலின் விளக்கம் அளிக்கவில்லையென்றால், இந்து சமுதாய மக்கள் அவரை மன்னிக்க மாட்டார்கள். கறுப்பர் கூட்டத்தை நேரடியாக கண்டிப்பதற்கு அவருக்குத் தடையாக இருப்பது எது?" என்ற கேள்வி எழுப்பியிருந்தார்.
இதேநேரம் இந்த விவகாரத்தில், ‘பழனி திமுக எம்.எல்.ஏ.வான ஐ.பி. செந்தில்குமாரின் ஆதரவாளர்கள், “திமுக தலைமை பழனி திமுக பாணியில் செயல்பட்டிருந்தால் இவ்வளவு தூரம் பிரச்சினை வந்திருக்காது” என்கிறார்கள்.
"முருகனை கொச்சைப்படுத்தியவர்களை கண்டித்து பழனி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அறிக்கை விட்டிருப்பது ஆறுதலான விஷயம்தான். ஆனால் இதிலும் அரசியல் இல்லாமல் இல்லை. பழனிமலை அடிவாரத்தில். முருகப்பெருமான் கோவிலை நம்பி கடைகள், விடுதிகள், ஹோட்டல்கள் என சுமார் 10 ஆயிரம் பேர் வாழ்வாதாரத் தொழில்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். மஞ்சக் கிழங்குத் தட்டு, தாலிக் கிழங்கு தட்டு, பூ விற்பனையில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டிருக்கிறார்கள். அதுபோல பழனிக்கு வெளியே அதேநேரம் பழனி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாப்பம்பட்டி, நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி போன்ற பகுதிகளில் இருந்து கொய்யாக் காய் உள்ளிட்ட பழங்கள் விற்பதற்காக தினந்தோறும் சுமார் ஐயாயிரம் பேர் பழனிக்குதான் வந்து செல்கிறார்கள். இவர்கள் எல்லாம் எப்போது முருகன் கோவில் திறக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தங்களைத் திட்டினால் கூட பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முருகனை ஏதேனும் சொன்னால் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். இவர்களின் கோபம் தன் பக்கம் திரும்பிவிடக் கூடாது என்பதற்காகவே ஜாக்கிரதையாக செயல்பட்டிருக்கிறார் செந்தில்குமார்.